டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்- தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்

 
Delhi

டெல்லியில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மே 28 அன்று புதுதில்லியில் உள்ள விவேகானந்தர் முகாமில் வெப்பமான கோடை நாளில் மக்கள் டேங்கர் மூலம் குடிநீர் சேகரிக்கின்றனர்.(பிடிஐ)

டெல்லியில் நிலவும் கடும் வெயிலால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முங்கேஷ்பூர் பகுதியில் இன்று அதிகபட்சமாக 51.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க நீர்வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் குழாய்கள் மூலம் வாகனங்களை கழுவுதல், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வீணாவது, கட்டுமான அல்லது வணிக நோக்கங்களுக்காக நீர் விநியோகத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இக்குழு கண்காணிக்கும்.

தண்ணீர் பற்றாக்குறை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், “டெல்லிவாசிகள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் இல்லாவிட்டாலும், தயவு செய்து தண்ணீர் விநியோகத்தை பகுத்தறிவுடன் பயன்படுத்துங்கள்... போதுமான அளவு தண்ணீர் கிடைத்தாலும், அதை வீணாகப் பயன்படுத்த வேண்டாம். திறந்த குழாய்களால் தங்கள் கார்களைக் கழுவ வேண்டாம் என்று அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்...” என்றார்.