மணிஷ் சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சிபிஐ சந்தேகிக்கித்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் மேலும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் மணிஷ் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.