டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலி!!
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அதன் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3க உயர்ந்துள்ளது. டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்படும் ஸ்பைஸ் ஜெட் , இன்டிகோ விமானங்கள் மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.