ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டன - தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நிராகரித்ததாக புகார் எழுந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் 23.09.2026 வெளியிட்ட செய்தியின்படி, கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல், வாக்காளர் பட்டியல் மென்பொருள் செயல்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலேயே இந்த ஆட்சேபனைகள் எழுந்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அரசமைப்பு 324ஆவது பிரிவின் கீழ் சட்டப்பூர்வ விதிகள், நடைமுறைகளை பின்பற்றியே ஆணையம் செயல்படுகிறது. முடிவெடுக்கும் முன் பல்வேறு கருத்துகள், கருத்து வேறுபாடுகள் எழுதுவது இயல்பானதுதான். ஆணையர்கள் மட்டுமின்றி ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் பரிந்துரைகளை கூற அதிகாரம் உண்டு. எஸ்.ஐ.ஆர். உள்பட 40 புதிய திட்டங்கள், சீர்திருத்தங்கள் ஒருமனதான முடிவுகளின்படி எடுக்கப்பட்டவை. ஜனநாயகத்தை காக்க, அரசமைப்பு கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

