கள்ளக்காதலனுக்காக கணவனை தலையணையை அழுத்தி கொலை செய்த மனைவி
கர்நாடகாவில் கள்ளக்காதல் தொடர்பால் கணவனை கொலை செய்த ஜோடி கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் உள்ள அஜீக்கர் என்ற ஊரை சேர்ந்தவர் 44 வயதான பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் தங்களது பதினெட்டாவது வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாலகிருஷ்ணாவின் வருமானம் போதுமான அளவு இல்லாததால் பிரதிமா அதே ஊரில் சொந்தமாக ஒரு பியூட்டி பார்லரை திறந்தார். மறுபுறம் இன்ஸ்டாகிராமில் தினம்தோறும் ரிலீஸ் பதிவிட்டு சமூக வலைதளத்தின் மோகத்தில் சிக்கியிருந்தார். சமீபத்தில் பிரதிமாவுக்கு 28 வயதான திலிப் ஹெக்டே என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை பிரதிமாவின் குடும்பத்தார் அவருக்கு அறிவுரை வழங்கினர். இந்த விவகாரம் ஒன்றரை மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்திற்கு புகாராக சென்ற நிலையில், அங்கு தான் திலிப் உடன் வாழ விரும்புவதாக அவர் கூறிய நிலையில் அனைவரும் அவரை சமாதானம் செய்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் நடந்த பிறகு சில நாட்களில் பாலகிருஷ்ணாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு அடுக்கடுக்காக பல உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் உடுப்பி, மங்களூரு, பெங்களூரு என பல நகரங்களில் பல உயர்தர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றபோது அவருக்கு மஞ்சள் காமாலை மட்டுமின்றி பல்வேறு வியாதிகள் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. தான் உயிர் பிழைப்பது கடினம் என்று தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணா, கடந்த 19ஆம் தேதி பெங்களூரு நகரில் இருந்த விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கிளம்பி இரவு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அடுத்த நாள் இருபதாம் தேதி காலை பாலகிருஷ்ணா மர்மமான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்திருந்தார். அவரது முகத்தில் பல இடங்களில் கீறல்களும் காயங்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இரு குடும்பத்தாரும் உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் பிரதிமாவின் அண்ணன் சந்தீப் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை தனியாக அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினார். பிரதிமாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் இருபதாம் தேதி காலை சுமார் 1:30 மணி அளவில் அவரது காதலனை வரவைத்து தலையணையை கொண்டு அவரை அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தான் செய்த தவறை மன்னித்து விட்டுவிடும் படி அவர் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காமல் அவரது சகோதரர் சந்தீப் உடனடியாக இந்த கொலை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலகிருஷ்ணாவை தலையணையை வைத்து கொலை செய்வது மட்டுமின்றி பிரதிமாவிடம் ஸ்லோ பாய்சன் வாங்கிக் கொடுத்தது தான்தான் என்று விசாரணையில் திலீப் ஒப்புக் கொண்டுள்ளான்.