வங்கக்கடலில் உருவானது 'மிதிலி' புயல்!!
வடமேற்கு வங்கக் கடலில் இன்று 'மிதிலி' புயல் உருவானது.
15ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 320 கிலோ மீட்டர் தென்-தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 460 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கே நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, நாளை அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா -கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மிதிலி ( MIDHILI) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் மிதிலி புயல், வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.