மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

 
Manipur

மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த  இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கூடுதல் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்த பாடில்லை. வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மூன்று மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரையும்,  தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித முன் அனுமதியும் இன்றி போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.