அடிமை மனப்பான்மையில் இருந்து காங்கிரஸ் இன்னும் வெளிவரவில்லை.. சி.டி. ரவி குற்றச்சாட்டு

 
சி.டி.ரவி

அடிமை மனப்பான்மையில் இருந்து காங்கிரஸ் இன்னும் வெளிவரவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.டி. ரவி குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் முந்தைய பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அந்த மாநிலத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது. தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நீக்கி மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும். கர்நாடக மாநிலத்திற்கான புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக புதிய குழுவை அரசு அமைக்கவுள்ளது என்று தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை.. இந்திய கல்வியை தனியார் மற்றும் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.. கம்யூனிஸ்ட் கட்சி

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய தீவிரம் காட்டுவது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.டி. ரவி கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையை ஏன் ரத்து செய்கிறீர்கள்? அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஆய்வு செய்ததா?. தேசிய கல்வி கொள்கை எதை பற்றியது?. தாய்மொழியில் கல்வி கற்பது தவறா?. காங்கிரஸின் கருத்துப்படி தாய்மொழியில் கல்வி கற்பது தவறு. அடிமை மனப்பான்மையில் இருந்து காங்கிரஸ் இன்னும் வெளிவரவில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020, முழுமையான திறன் மேம்பாட்டிற்கு கடுமையான முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

காங்கிரஸ்

ஆனால், ஒவ்வொரு இளைஞர்களும் திறமையானவர்களாக இருப்பதை  காங்கிரஸ் விரும்புவதில்லை. அதனால்தான் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?. தேசிய கல்விக் கொள்கையின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் மேற்பார்வையில் மூன்று லட்சம் பேரின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.