இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானது போல் பா.ஜ.க.வில் நடக்காது.. எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.டி. ரவி

 
4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக… 

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்ற பி.எஸ்.எடியூரப்பாவின் அறிவிப்புக்கு, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானது போல் பா.ஜ.க.வில் நடக்காது. சீட்டு கொடுப்பது குறித்து கட்சிதான் முடிவு எடுக்கும்  என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், நான் தேர்தல் போட்டியிடவில்லை. 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஷிகாரிபுரா சட்டப்பேரவை தொகுதியில் எனது இளையமகன் விஜயேந்திரா போட்டியிடுவார். என்னை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற செய்ய ஷிகாரிபுரா மக்களிடம் கைகூப்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். பி.எஸ்.எடியூரப்பாவின் மூத்த மகன் பி.ஒய். ராகவேந்திரா, சிவமொக்கா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.டி.ரவி

ஷிகாரிபுரா சட்டப்பேரவை தொகுதியில் எனது இளையமகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று பி.எஸ்.எடியூரப்பா அறிவிப்புக்கு பா.ஜ.கவுக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியில் சமையலறையில் முடிவெடுப்பதில்லை. தலைவர்களின் பிள்ளைகள் என்பதாலேயே அவர்களுக்கு சீட்டு கிடைக்காது. மேலும் சீட்டு கொடுப்பது குறித்து அவர்களது வீட்டில் முடிவு செய்ய முடியாது. இப்போது விஜயேந்திரரைப் பற்றி கேட்டீர்கள். 

பா.ஜ.க.

டிக்கெட்டை அவருக்கு கொடுப்பது குறித்து சமையலறையில் அல்ல, கட்சியின் நாடாளுமன்ற வாரியத்தால் முடிவு எடுக்கப்படும். சர்வேயின் அடிப்படையில் வெற்றி பெறுவதற்கான அளவுகோல்களின் அடிப்படையில் டிக்கெட் வழங்குவது முடிவு செய்யப்படும். ஆனால் அந்த சர்வே குடும்பத்தில் நடக்காது. ஒட்டுமொத்த கட்சியையும், ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் சமாதானப்படுத்தி ஒருவர் தனக்கு சீட்டு வாங்கிவிட முடியாது. இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி எப்படி பிரதமரானரோ அது போன்று பா.ஜ.க.வில் நடக்காது. டிக்கெட்  கொடுக்கும் முடிவு குடும்பத்தில் நடக்காது என்றுதான் என்னால் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.