படித்துறைக்கு வந்த முதலைக்கு மழை வேண்டி சிறப்பு பூஜை செய்த அர்ச்சகர்!
தெலங்கானாவில் முதலைக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பீச்சுப்பள்ளி நதியில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று, பக்தர்கள் புனித நீராடும் படித்துறைக்கு வந்தது. இதனை கண்ட அப்பகுதி அர்ச்சகர், அந்த முதலையை மழை கடவுளான வருண பகவானின் வாகனம் எனக் குறிப்பிட்டு, மாநிலத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி அங்கு சிறப்பு பூஜை செய்தார். முதலமைச்சர் பூஜை செய்த அர்ச்சகரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. பூசாரி அனில் சர்மா ஒரு முதலைக்கு பூஜை செய்ததைக் கண்ட கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். அவர் மந்திரங்களை உச்சரித்து, முதலைக்கு அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்தார்.
முதலை, மழைக்கடவுளான வருண பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது என்று அனில் ஷர்மா விளக்கினார். மக்களுக்குப் பெருமழையும் செழிப்பும் கிடைக்க வேண்டி, தான் இந்தப் பிரார்த்தனைகளைச் செய்ததாகவும் அவர் கூறினார். பின்னர், காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறைப் பணியாளர்கள், உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து, கயிறுகளைப் பயன்படுத்தி முதலையைப் பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டனர்.

