சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். சி.பி.ராதாகிஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார். சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்ற சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 20, 1957 அன்று பிறந்தார். 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் 2023 பிப்ரவரி 18 முதல் 2024 ஜூலை 30 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், 2024 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் 2024 மார்ச் முதல் ஜூலை வரை தெலங்கானா ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றியுள்ளார். தற்போது, 2024 ஜூலை 31 முதல் மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். (RSS) உடன் 1973ஆம் ஆண்டு முதல் தொடர்புடையவர்.


