ஓடும் காரில் தீவிபத்து- உடல் கருகி பலியான காதல் ஜோடி
தெலுங்கானாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண், ஒரு இளைஞர் உடல் கருகி இறந்தனர்.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கானபூர் சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த காரில் திடீரென தீ பிடித்து கொண்டது. சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீயில் எரிய தொடங்கியது. இதில் காரை ஓட்டி வந்த இளைஞர் தீயில் படுகாயத்துடன் கதவை திறந்து வெளியே வந்து நடைபாதையில் விழுந்து துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். மேலும் காரில் அவருடன் வந்த பெண்னும் தீயில் சிக்கி உயிருடன் கருகினர்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த மல்காஜிகிரி ஏசிபி சக்கரபாணி, கட்கேசர் சி.ஐ. பரசுராம் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்தவர் குறித்து விசாரனை செய்தனர். இதில் நாரப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பதும் அவர் மொத்த சைக்கிள் கடை வியாபாரம் செய்து வருவதும் மெடிப்பள்ளியில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியில் செல்ப் டிரைவிங் கார் வாடகைக்கு எடுத்து கொண்டு செல்லும் போது கார் தீ விபத்து ஏற்பட்டு இறந்ததை கண்டறிந்தனர். காரில் ஸ்ரீராமுடன் இருந்த பெண் அவரது காதலி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.