‘கேசிஆர்-க்கு கவுண்ட்டவுன் ஸ்டார்ட்’.. சோனியாவுடன் ஒய்.எஸ்.சர்மிளா திடீர் சந்திப்பு..

 
சோனியா காந்தி - ஒய்.எஸ்.சர்மிளா


டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை, YSR தெலங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா சந்தித்து பேசினார்..  தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் முதல் 2 கூட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 3வது கூட்டம் இன்றும் , நாளையும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது.  இதில் கலந்துகொள்வதற்காக  நாடு முழுவதிலும் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்தக்கூட்டத்தில் 6 முதலமைச்சர்கள் உள்பட 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

“அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது” -கனிமொழி எம்.பி விமர்சனம்!

இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  தெலங்கானாவின்  ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா  கட்சித் தலைவரான ஒய்.எஸ்.சர்மிளா, டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.  தெலங்கானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.சர்மிளா, “நான் இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தேன். மிகவும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ஆரின் (சந்திரசேகர ராவ்) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்தார்.