இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா அதிவேகமாக பரவும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

 
who

 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 58,097 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்  இந்தியாவில் இதுவரை  4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 2,14,004  பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த சில  வாரங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில்  தற்போது தொற்று எண்ணிக்கை  மீண்டும் உயர தொடங்கிவிட்டது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்  இந்தியாவில்  23 மாநிலங்களில்  பரவி  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது.

ay 4.2 corona

 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், "தற்போது பரவிவரும் ஒமிக்ரான் அதிகம் பரவும் தன்மை கொண்டது.  இதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாக உள்ளது. ஆனாலும் ஒமிக்ரான் வைரஸ்,  ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.  இந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும்,  அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்" என்று எச்சரித்துள்ளார். அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

corona virus

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 653பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 464 பேரும்  தமிழ்நாட்டில் 121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மகாராஷ்டிரா, அரியானா ,மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் , கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.