அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு... பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை...

 
பிரதமர் மோடி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார்.


கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் அனைவரும் அதிகம் உச்சரித்த வார்த்தை கொரோனாவாகத்தான் இருந்திருக்க முடியும்.. அந்த அளவிற்கு கொரோனா வைரஸின் பாதிப்பு நம்மை ஆட்கொண்டிருக்கிறது.  கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்திருக்கிறது. தற்போது தன் பங்கிற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  அண்மைக்காலமாக இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது..  நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒன்றரை  லட்சத்தை தாண்டியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.59 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.   இதேபோல் நாடு முழுவதும் 3,600 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் கொரோனா

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த் வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மோடி

இருந்தபோதிலும் வைரஸ் பரவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த  பிரதமர் மோடி இன்று மாலை  4.30 மணி அளவில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.  ஊரடங்கு கட்டுப்பாடுகள்,  தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தல்  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.