ஜம்மு காஷ்மீரை போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சி- ராகுல்காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்த நிமிடமே அமல்படுத்துவதற்கு ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை செய்ய அரசு திட்டமிடுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, “ஜம்மு காஷ்மீரை போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. தொகுதிறுவரையறை மசோதாவின் மூலம் இந்திய அரசியல் வரைபடத்தையே மாற்ற முயற்சிக்கிறது. இது வெட்கக்கேடான செயல் பல மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா நிறைவேறாது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்த நிமிடமே அமல்படுத்துவதற்கு ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை செய்ய அரசு திட்டம். ஓபிசி பிரிவினருக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அதிகாரம் தர மத்திய அரசு விரும்பவில்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கான மசோதாவே இல்லை. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் இந்த மசோதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தென்னிந்திய மக்களும் வடகிழக்கு பிராந்திய மக்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உரிமைகளை நாங்கள் பறிபோக விட மாட்டோம். ஒருபோது அதை அனுமதிக்க மாட்டோம். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கூட தெரியும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உண்மையை எடுத்து சொன்னால் ஒன்றிய அரசுக்கு ஏன் கசக்கிறது. நமது நாட்டின் சிந்தனையில் பெண்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக திகழ்கிறார்கள். அனைவருமே தங்கள் வாழ்க்கையில் பெண்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்கிறோம். தாய் தான் என்னுடைய முதல் ஆசிரியர்” என்றார்.


