”மோடிக்கு தைரியம் இருந்தால் இதைமட்டும் சொல்ல சொல்லுங்கள்”- ராகுல்காந்தி பகிரங்க சவால்
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை எனது உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறினார்.

மக்களவையில் ஆப்ரேசன் சிந்தூர் விவாதத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை எனது உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டன. ஆப்ரேசன் சிந்தூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன. ஒன்றிய அரசுக்கு துணைநிற்பது என இந்தியா கூட்டணி கட்சிகள் கூடி முடிவு செய்தோம். ஒன்றிய அரசின் பின்னால் எதிர்க்கட்சிகள் மலைப்போல் துணை நின்றன. பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன்.
பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே 29 முறை மத்தியஸ்தம் செய்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்திரா காந்தியின் தைரியத்தில் பாதி இருந்தால், மோடி ட்ரம்பை அழைத்து நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என சொல்லட்டும். இந்திய இராணுவம் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது பிரதமர் மோடி தான். ராணுவத்தை சரியாக பயன்படுத்தும் திறன் பாஜக அரசிடம் இல்லை. இந்திய இராணுவத்துக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என தைரியம் இருந்தால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும். பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கக் கூடாது என்று கூறியதால்தான் இந்தியா விமானங்களை இழக்க நேரிட்டது. போர் நிறுத்தம் தேவை என பாகிஸ்தானிடம் இந்தியா தான் கேட்டுக் கொண்டது. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் எனக் கூறியது மிகப்பெரிய தவறு. பஹெல்காம் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாக். ராணுவ தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார். பாக். ராணுவ தளபதி முனீருக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்ததை கண்டிக்கும் தைரியம் ஒன்றிய அரசுக்கு உள்ளதா? மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள்?” என சுளீரென கேள்வி எழுப்பினார்.


