2014 ஆம் ஆண்டே வாக்குத் திருட்டு ஆரம்பமானது- ராகுல்காந்தி
தேர்தல்களில் வாக்குகளை திருடியே பிரதமர் மோடி வெற்றி பெறுகிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் குளறுபடியை கண்டித்து 'வாக்காளர் உரிமை யாத்திரை'யை பீகாரில் நடத்தி வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. முசாபர்பூரில் நடந்த வாக்காளர் உரிமை யாத்திரையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “நரேந்திர மோடிக்கும் அமித்ஷாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது. தேர்தல்களில் வாக்குகளை திருடியே பிரதமர் மோடி வெற்றி பெறுகிறார். இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னரே குஜராத்தில் வாக்கு திருட்டு ஆரம்பமானது.
கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா சொன்னார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது யாருக்கும் தெரியாது. ஆனால் அமித்ஷாவால் மட்டும் அடுத்த 40 ஆண்டுகள் நடைபெறக்கூடியவை பற்றி எப்படி அறிந்திருக்க முடிகிறது. அதுதான் வாக்குத்திருட்டு. இந்தியாவில் வாக்குகள் திருடப்படுவதை 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட புரிந்துகொண்டுள்ளனர்” என்றார்.

