வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரகசியமாக ஓட்டலில் தங்க வைப்பு..

 
congress

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முகத்துடன் காணப்படும் நிலையில், வெற்றிபெறும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ரகசியமாக ஓட்டலில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  பெரும்பாண்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின் படி 131 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  ஆளும் கட்சியான  பாஜக 66 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி21 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.  இதனையடுத்து காங்கிரஸ் அரிதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என கருதப்படுகிறது.  

rahul

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பாஜக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.  வெற்றி உறுதியாகும் நிலையில்  ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது.  கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும்  பெங்களூரு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே  வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  நட்சத்திர ஓட்டல், விடுதிகளில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடும் என்பதால்,  கட்சியினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க  காங்கிரஸ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  கடந்த காலங்களில் இதுபோன்று, காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை இழந்து ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதேபொன்றதொரு  நிலைமை மீண்டும்  வந்துவிடக்கூடாது என்பதற்காக,  எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட் போன்ற நவீன விடுதியில் தங்க வைத்து கண்காணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்கிற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.