ரூ.1,744 கோடி சொத்து இருக்கு! காங்கிரஸ் வேட்பாளர் பிரமாண பத்திரம் தாக்கல்

 
Yusuf Sharif

கர்நாடகாவில் நடைபெறவுள்ள எம்.எல்.சி தேர்தலுக்கு யூசுப் ஷெரிப் என்பவர்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவர பட்டியலில் தனது சொத்து மதிப்பு 1744 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார். யார் அந்த யூசுப், இவரின் பின்புலம் என்ன? என்பதை பார்க்கலாம்.

‛1744 கோடி ரூபாய் சொத்து தான் இருக்காம்...’ - கர்நாடகா எம்.எல்.சி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் தாக்கல்!

கோலார் தங்கச் சுரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் ஷெரிப், தற்போது பெங்களூருவில் உள்ள மில்லர்ஸ் டேங்க் பண்ட் சாலையில் வசித்துவருகிறார். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவரின் பிரதான மற்றும் முதல் தொழில் ரியல் எஸ்டேட். 54 வயதான யூசுப், காங்கிரஸ் வேட்பாளராக எம்.எல்.சி தேர்தலில் களமிறங்குகிறார். தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்திருந்த பத்திரத்தில், இரண்டு மனைவியும், 5 குழந்தையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய மொத்த சொத்து மதிப்பு 1744 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வசம் இருக்கும் விவசாய நிலங்களின் மதிப்பு மட்டும் மொத்தமாக 1640 கோடி ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யூசுப்பிடம், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார், சுமார் 49 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இரண்டு ஃபார்ச்சூனர் கார்களும் உள்ளது.

யூசுப் ஷெரிப்பின் சொத்து மதிப்பு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், பாஜகவின் மாநிலத் தலைவர் எம்.டி.பி நாகராஜ் ஆகியோரை விட அதிகமாக இருப்பது கர்நாடக அரசியல்வாதிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. 12 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் யூசுப் பெயரில் 67 கோடி ரூபாய் கடனும் உள்ளது.  தன்னிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து, 13.43 கோடி ரூபாய் பணத்தை வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக நேர்மையுடன் குறிப்பிட்டிருக்கும் யூசுப், அவர் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெளிப்படையாக அனைத்தையும் அறிவித்த யூசுப் தேர்தலில் வெற்றிப்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.