மேற்கு வங்கத்தில் காங்கிரஸை அழித்தவர் மம்தா பானர்ஜி... காங்கிரஸின் மூத்த தலைவர் சோமன் ராய் சவுத்ரி ஆவேசம்

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸை அழித்தவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸூடான கூட்டணி மாநில தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் சோமன் ராய் சவுத்ரி தெரிவித்தார்.

கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸின் இந்த வெற்றி தேசிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வந்த மம்தா பானர்ஜி, கடந்த சில தினங்களுக்கு முன், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடத்தில் அவர்களை எங்க கட்சி ஆதரிக்கும் ஆனால் அவர்களும் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில், மம்தா பானர்ஜி தனது நிலைப்பாட்டை தளர்த்தினாலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் போட்டியிடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி உறுதியாக தெரிவித்தார். தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோமன் ராய் சவுத்ரி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு அனுப்பிய இமெயிலில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் காங்கிரஸை அழித்தவர் மம்தா பானர்ஜி. 

டி.கே.சிவகுமார்

நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், அவர் எப்போதுமே காங்கிரஸ் கட்சியை தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார். அவ்வப்போது, அவர் (மம்தா பானர்ஜி) நமது உயர் தலைவர்களை தாக்கி, கட்சியை அழிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அரசியல் துரோகி மம்தா பானர்ஜி உடனான கூட்டணியை மேற்கு வங்கத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் 2024 தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸூடன் எந்த சாத்தியமான கூட்டணிக்கு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். காங்கிரஸை நாங்கள் ஆதரிப்போம் என்று மம்தா பானர்ஜி கூறியதை டி.கே. சிவகுமார் வரவேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.