கொச்சியில் சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டும்.. கேரள அரசை வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர்

 
சதீஷன்

கேரள மாநிலம் கொச்சியில் சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசை காங்கிரஸின் மூத்த தலைவர் சதீஷன் வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் கொச்சியின் பிரம்மபுரம் கழிவு ஆலையில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. குப்பை மேட்டில இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொச்சியில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டும் என்று  முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சதீஷன் வலியுறுத்தியுள்ளார். 

பிரம்மபுரம் கழிவு ஆலை (கோப்புப்படம்)

இது தொடர்பாக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கூறியதாவது: கொச்சி மாநகராட்சியின் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் மார்ச் 2ம்  தேதி தொடங்கிய தீயின் புகை சுற்றுப்புற பகுதிகளுக்கு பரவி ஆபத்தான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொச்சி மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் புகை பரவியது. இதனால் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்படும். 

பினராயி விஜயன்

சுகாதாரம், உள்ளாட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் பிரம்மபுரத்தில் செயல்படவில்லை. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட இடத்தில் அரசாங்கம் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  என்னை பொறுத்தவரை, இது ஒரு தெளிவான ஊழல் மற்றும் ஊழல் ஒப்பந்தக்காரர்கள் இதற்கு பின்னால் உள்ளனர். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.