நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினாலே மைக் அணைக்கப்படுகிறது - மல்லிகார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசினாலே மைக் அணைக்கப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

2023 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும்,  மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர்.   இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து   நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல்2 மணிக்கு கூடியது. மீண்டும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
 

Parliament

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: மோடிஜியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரம் போன்று அவர்கள் நாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் எழுப்பும்போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் அவையில் அமளி தொடங்கி விடுகிறது. இவ்வாறு கூறினார்.