ரூ.2000 நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு பாஜகவின் வழக்கமான பாணி - காங்கிரஸ் விமர்சனம்

 
Jairam Ramesh

2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.