அநீதிக்கு எதிராக போராடுவேன்... மறுவாக்கு எண்ணிக்கையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த காங்கிரஸின் சவுமியா ரெட்டி

 
சவுமியா ரெட்டி

ஜெயநகர் தேர்தலில் இந்த (மறுவாக்கு எண்ணிக்கை) அநீதிக்கு எதிராக போராடுவேன் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்று ஜெயநகர் மக்களிடம் மறுவாக்கு எண்ணிக்கையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வேண்டுகோள் விடுத்தார்.
 
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஜெயநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராமமூர்த்தியும், காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டியும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஜெயநகர் தொகுதியில் முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிராகரிக்கப்பட்ட 177 வாக்குகளை எண்ண வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால், பின்னர் அந்த வாக்குகளும் எண்ணப்பட்டன. அதில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவே, சவுமியா ரெட்டியை விட  ராமமூர்த்திக்கு 16 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. இதனால் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  

ராமமூர்த்தி

பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி தனது நெருங்கிய போட்டியாளரான சவுமியா ரெட்டியை 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி  57, 797 வாக்குகளும்,  காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 57, 781 வாக்குகளும் பெற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1,226 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.  முதலில் வெற்றி பெற்று விட்டோம் என்று  மகிழ்ச்சியில் இருந்த சவுமியா ரெட்டி பின்னர்  தோல்வி என அறிவிக்கப்பட்டதால், அவர்  வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கண்ணீருடன் அழுதுகொண்டே வெளியேறினார்.   

சவுமியா ரெட்டி

இந்நிலையில் சவுமியா ரெட்டி டிவிட்டரில், எனக்கு வாக்களித்த ஜெயநகர மக்கள், எனக்கு ஆதரவாக இருந்த இந்திய காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களும் நன்றி. ஒற்றுமையை காட்டிய ஆயிரக்கணக்கானோருக்கு நன்றி. ஜெயநகர் தேர்தலில் இந்த (மறுவாக்கு எண்ணிக்கை) அநீதிக்கு எதிராக போராட தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார். பா.ஜ.க. வேட்பாளர்  ராமமூர்த்தியின் வெற்றிக்கு எதிராக சவுமியா ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார் என்று கூறப்படுகிறது.