கோவை, மங்களூரு குண்டுவெடிப்பு.. தென்னிந்தியாவில் செயல்படும் பயங்கரவாதிகள் - ஐ.எஸ் அமைப்பு ஷாக் ரிப்போர்ட்..

 
கோவை, மங்களூரு குண்டுவெடிப்பு.. தென்னிந்தியாவில் செயல்படும் பயங்கரவாதிகள் -  ஐ.எஸ் அமைப்பு ஷாக் ரிப்போர்ட்..

தென்னிந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் , கோவை மற்றும் மங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.  

தமிழகத்தில் கோயம்பத்தூர் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி  கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே காரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். விசாரணையில் இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்தது. இதேபோல்  கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (27) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. விபத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஷாரிக் சிகிச்சைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.  

கோவை கார் விபத்து

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் என்.ஐ.ஏ  பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த இரு சம்பவங்களை நிகழ்த்தியதும் ஒரே கும்பல் தானா?,  ஐ.எஸ் அமைப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு  இருக்கிறதா என்கிற கோணத்தில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில்  கோவை குண்டுவெடிப்புக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகும், மங்களூரு குண்டுவெடிப்புக்கு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஐ.எஸ். அமைப்பு தென்னிந்தியாவில் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும், அவர்கள் தான் இந்த சம்பவங்களை அரங்கேற்றியதாகவும்  தெரிவித்துள்ளது.

கொராசன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு (ISKP),தங்களது  "வாய்ஸ் ஆஃப் குராசன்" இதழில்  தென்னிந்தியாவில் தங்கள் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள்தான் இந்த இரு குண்டுவெடிப்பில்  ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது.   இருப்பினும்,   'முஜாஹிதீன்கள்'  தென் இந்தியாவின் எந்த  மாநிலத்தில் செயல்படுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை.  ஆனால் வல்லுநர்கள் அவர்கள் பெரும்பாலும் கேரளாவில் இருப்பதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

மங்களூரு குண்டுவெடிப்பு

ஐஎஸ்கேபி  (ISKP)இதழானது ISIS மற்றும் அல்-கொய்தா ஆகிய 2  பயங்கரவாத அமைப்புகளில் அதிகாரப்பூர்வ இழதாக இருந்து வருகிறது. இந்த இதழில், “கோயம்புத்தூர்,  பெங்களூரில் நடைபெற்ற  எங்கள் தாக்குதல்களை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையா.  அங்கு எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குஃபார்களை (முஸ்லிமல்லாதவர்கள் மற்றும்  இஸ்லாமியத்தை நம்ப மறுப்பவர்களையும் ) பழிவாங்கினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.   ISKP இன் மறைமுகமான ஒப்புதல், தென் இந்திய மாநிலங்களில்  பயங்கரவாதிகள்- இஸ்லாமிய அரசுடன் தொடர்பில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.  
 
மேலும், இந்த அமைப்பின்  சமீபத்திய இதழில், பாபர் மசூதி இடிப்பு  மற்றும் குஜராத் கலவரங்களை குறிப்பிட்டு  இந்துக்கள், பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய இராணுவத்திற்கு எதிராக விஷத்தைக் கக்கி, தென்னிந்தியாவில் உள்ள முஜாஹிதீன்களை அவர்களுக்கு எதிராகப் போரிடத் தூண்டி வருகிறது.  அத்துடன்,  இஸ்லாமியர்கள் மீதான அத்துமீறல்கள் எல்லை தாண்டிவிட்டதாக குறிப்பிட்டு,  "உங்கள் அமைதி குழப்பமாகவும், உங்கள் பாதுகாப்பு பயமாகவும், உங்கள் மகிழ்ச்சி துக்கமாகவும் மாறும்” என்றும் எச்சரிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.