காதல் திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து கொலை செய்த பெற்றோர்

சித்தூர் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண், அவரது குடும்பத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மசிது மிட்டாவை சேர்ந்த யாஸ்மின் பானு என்பவர் புத்தலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய் தேஜ் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி நெல்லூரில் சென்று பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு, பிப்ரவரி 13 அன்று திருப்பதியில் உள்ள முத்யாலா ரெட்டிபள்ளி காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கோரினர். இதனால் போலீசார் யாஸ்மின் பானுவின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு யாஸ்மின் பானுவின் பெற்றோர் அவருடன் தொலைபேசியில் அவ்வப்போது பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் சாய் தேஜுக்கு போன் செய்த யாஸ்மின் பானுவின் பெற்றோர் அவரது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை பார்க்க யாஸ்மின் பானுவை அனுப்பும்படி கேட்டு கொண்டனர். இதனால் சாய் தேஜ் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு யாஸ்மின் பானுவை ஒரு காரில் சித்தூருக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து, யாஸ்மின் பானுவை அவரது சகோதரர் வேறு காரில் அழைத்துச் சென்றார். அதன் பிறகு அனைவரது போனும் சுவிட் ஆஃப் செய்யப்பட்டதால் சாய்தேஜ் உடனடியாக வீட்டிற்கு சென்று யாஸ்மின் குறித்து கேட்டுள்ளார். இதற்கு யாஸ்மின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் இருப்பாள் சென்று பார்த்துக்கோ என்றனர். இதனால் சாய்தேஜ் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது யாரும் இல்லை என்றனர். பின்னர் போட்டோவை காண்பித்து கேட்டபோது தூக்குமாட்டி கொண்டு இறந்ததாக வந்ததால் பிணவறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் சாய்தேஜ் தனது மனைவி யாஸ்மின் பானு மரணத்திற்கு அவரது பெற்றோர்களே காரணம் என்று சாய் தேஜ் குற்றம் சாட்டுகிறார். யாஸ்மின் பானுவை அழைத்துச் சென்று கொலை செய்ததாக அவர் போலீசில் புகார் செய்தார். இதனால் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள சித்தூர் நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.