இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டது - மீண்டும் வந்து வாக்களித்த மிசோரம் முதலமைச்சர்!

 
Mizoram

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்களிக்காமல் திரும்பி சென்ற மிசோரம் முதலமைச்சர் மீண்டும் வந்து வாக்களித்தார். 
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  ஆளும் மிசோ தேசிய முன்னணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் , எதிர்க்கட்சிகளான மிசோரம் மக்களின் இயக்கம் காங்கிரஸ் கட்சி ஆகியவையும் போட்டியில் களமிறங்கியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.  174 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 8.57 லட்சம் வாக்காளர்கள் இன்று நிர்ணயம் செய்ய உள்ளனர்.  1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

mizoram

இந்த நிலையில், வாக்களிப்பதற்காக வந்த அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா வாக்களிக்காமல் திரும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் முதலமைச்சர் சோரம் தங்கா வாக்களிக்க முடியாமல் திரும்பினார். இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் வந்து வாக்களித்தார்.  ஐஸ்வால் வடக்கு 2 சட்டமன்ற தொகுதியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது.  இயந்திர கோளாறால் வாக்களிக்காமல் சென்ற முதல்வர் சோரம் தங்கா தற்போது வாக்களித்துள்ளார்.