சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணி தொடங்கியது

சந்திரயான் தொடரின் முதல் விண்கலமான சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த பெருமைக்குரியது, சந்திரயான்-2 லேண்டர், தொடர்பை இழந்த நிலையில், பகுதி அளவு மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது.
இந்நிலையில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தரையிறங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் லேண்டரின் வேகம் 5,700 கி.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது. 17 நிமிடங்களில் லேண்டர் 8 கட்டங்களாக பயணித்து நிலவில் லேண்டர் தரையிறங்க உள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டர் தரையிறங்கவுள்ளது.
நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைக்கும் உலகின் நான்காவது நாடாக இந்தியா திகழும். அத்துடன் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய உலகின் ஒரே நாடாக இந்தியா திகழும்.