கூட்டநெரிசல் சம்பவம்- முன்கூட்டியே தெரிந்திருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும்: சந்திரபாபு நாயுடு
ஆந்திரா - ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோயில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலியான சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள காசிபுக்காவில் தனியாருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா சாமி கோயில் உள்ளது. ஓர் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஏகாதசி என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இந்த கூட்ட நெரிசலில் அங்கிருந்த தடுப்பு கம்பி விழுந்ததில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மீது விழுந்து 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காயமடைந்தவர்களை மீட்டு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வெங்கடேஸ்வரா கோயில் தனி நபருக்கு சொந்தமானது. காவல்துறை, உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும்” என்றார்.


