திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க 'சஞ்சார் சாத்தி'- மத்திய அரசு அறிமுகம்

 
sanchar sathi

நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க 'சஞ்சார் சாத்தி' என்ற புதிய இணையதள சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதே, பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கம் என்பதால்,  அதனை நிறைவேற்றும் விதமாக மத்திய தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய  இணையதளத்தை இன்று தொடங்கிவைத்தார். இந்த இணையதளம்  தொலைந்து போன செல்போன்களைக்  கண்டறியவும், போலி செல்ஃபோன்களை அடையாளம் காணவும் உதவும்.

விழாவில் பேசிய அமைச்சர், சில மாநிலங்களில்,  சோதனை முயற்சியாக சஞ்சார் சாத்தி இணையதளத்தை பயன்படுத்தியதன் மூலம் 40 லட்சம் போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு, அதிலிருந்து, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதள சேவையை பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசின் தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் பயனாளிகளின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இணையதள சேவை, செல்ஃபோன் சார்ந்த மோசடிகளைத் தடுக்கவும், செல்ஃபோன்களைத் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறியவும், வங்கி சேவை சார்ந்த மோசடிகளை அடையாளம் காணவும் உதவும் என்றும் தெரிவித்தார்.

சிஇஐஆர் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம்  தொலைந்து போன அல்லது  திருடப்பட்ட செல்ஃபோன்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.