டெல்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகள் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது.
டெல்லி செங்கோட்டையில் நடத்தப்பட்டது தீவிரவாத தாக்குதல் என முதல் முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் டெல்லி செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் செங்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக பல உலக நாடுகள் ஆதரவு கூறியுள்ளன அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவிதமான தீவிரவாத செயலையும் பொறுத்துக் கொள்ள முடியாது, நவ.10ல் நடந்தது மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் எனக் கூறியுள்ள மத்திய அரசு, தேச நலனுக்கு எதிரான மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் என்றும் மிக விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவோம், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்தார்.

