லாலு பிரசாத் யாதவின் மனைவி, மகள்கள் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

 
Raid

நிலமோசடி வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவியும் குறிப்பிட்ட காலத்திற்கு பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் 2004-2009 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே அமைச்சராக இருந்த போது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எந்த விளம்பரமோ, பொது அறிவிக்கையோ இல்லாமல் இந்த நியமனங்கள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஊழல் முறைகேட்டில் லாலு யாதவ், அவரது மனைவி ராபரி தேவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

lalu prasad

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அவரது மகள்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  முன்னதாக 2021-ஆம் ஆண்டில், யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறிந்ததை அடுத்து, வழக்கை முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில், முன்னாள் முதல்வர் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ மீண்டும் விசாரணை செய்து வருவது குறிப்பிடதக்கது.