உத்தர பிரதேசத்தில் உமேஷ் பால் படுகொலை எதிரொலி.. கேங்ஸ்டர் உதவியாளரின் வீடு புல்டோசர் மூலம் இடிப்பு

 
புல்டோசர் மூலம் இடிக்கப்படும் வீடு

உத்தர பிரதேசத்தில் அண்மையில் பட்டபகலில் நடந்த உமேஷ் படுகொலை சம்பவத் தொடர்ந்து, பிரபல கேங்ஸ்டரின் உதவியாளரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் 2005ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால். கடந்த  வெள்ளிக்கிழமையன்று உமேஷ் பால்  பிரயாக்ராஜில் உள்ள அவரது இல்லத்துக்கு வெளியே வைத்து மர்ம நபர்கள் 5 பேரால்  கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உமேஷ் பாலின் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டார். உமேஷ் பால் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிக் அகமது

உமேஷ் பால் கொலையை திட்டமிட்டது கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக  மாறியவரும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான அதிக் அகமது தான் என்று உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. உமேஷ் பால் கொலை தொடர்பான எப்.ஐ.ஆரில், அதிக் அகமது, அவரது மனைவியும் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரபல தலைவருமான ஷாயிஸ்தா பர்வீன் மற்றும் அவரது மகன் ஆசாத் அகமது ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

யோகி

இந்நிலையில், உமேஷ் பால் கொலை சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன அதிக் அகமதுவின் நெருங்கிய உதவியாளரான ஜாபர் அகமதுவின் பிரயாக்ராஜில் உள்ள வீட்டை இடிக்க பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் நேற்று காலை புல்டோசர்களை கொண்டு வந்தது.. பங்களாவில் அதிக் அகமதுவின் மனைவி மற்றும் மகனும் இருந்ததாக தகவல். அந்த பங்காளவில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கின்றன. புல்டோசர் மூலம் வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது தற்போது வாடிக்கையான நிகழ்வாக மாறி விட்டது.