தெலங்கானாவில் வேட்புமனு தாக்கலின்போது மோதல்- போலீஸ் தடியடி

தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினத்தில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இன்று நல்ல நாள் என்பதால் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பல கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் தெலுங்கானா முழுவதும் எங்கு பார்த்தாலும் பல்வேறு கட்சி கொடி அணிந்து காணப்பட்டனர். இந்நிலையில் ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக புறப்பட்டபோது பி.ஆர்.எஸ். வேட்பாளர் கிஷன் ரெட்டியும், காங்கிரஸ் வேட்பாளர் மல் ரெட்டி ரங்கா ரெட்டியும் வந்தனர். இருதரப்பு கட்சியினரும் திரண்ட நிலையில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.
அப்போது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிக்கான குச்சிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு கட்சியினரின் பேரணியில் மோதிக் கொண்டதால் தொண்டர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த தாக்குதலில் பல தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கற்கள் வீசியதில் வாகனங்கள் மீது விழுந்ததில் பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. போலீசார் சிலரும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.