முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கோகோயின் பார்டி- சோதனைக்கு சென்ற போலீசார் மீது துப்பாக்கி சூடு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பைலட் ரோஹித் ரெட்டி பண்ணை வீட்டில் நடந்த கோகோயின் பார்டியில் தெலுங்கு தேசம் கட்சியின் ஏலேரு தொகுதி எம்பி மகேஷ் உள்பட 11 பேரை போதை தடுப்பு சிறப்பு கழுகு படை கைது செய்தது.

பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் போதை மருந்து பயன்படுத்தி பார்டி நடப்பதாக போதை மருந்து தடுப்பு சிறப்பு கழுகுப்படை போலீசாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சென்றதும் போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் சுதாரித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து பண்ணை வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு போதை மருந்து பயன்படுத்து விருந்து நடப்பதைக் கண்டறிந்தனர். மேலும் பண்ணை வீட்டில் நடைபெற்ற விருந்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலம் ஏலூரு தொகுதி எம்பி புட்டா மகேஷ் உட்பட 11 பேர் பங்கேற்றதால் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போதை மருந்து உட்கொண்டார்களா உடனடியாக பரிசோதனை செய்ததில் முன்னாள் எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டிக்கு போதை மருந்து பயன்படுத்தியதாக பாசிட்டிவ் வந்தாலும் தெலுங்கு தேசம் கட்சி எம்பி மகேஷ் நெகடிவ் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அனைவரையும் மெயினாபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான செவெல்லா டிசிபி யோகேஷ் நிருபர்களிடம் பேசுகையில் மொய்னாபாத்தில் உள்ள ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில் அனுமதியின்றி ஒரு பார்டி நடத்தப்பட்டதாக இரவு 9.30 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றது நமித் சர்மா என்ற டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும் போலீசார் அதில் இருந்து தப்பித்து கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி ரோஹித் ரெட்டியின் தம்பி ரித்தேஷ் ரெட்டிக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்தது.

பண்ணை வீட்டில் நடைபெற்ற விருந்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கி ரித்தீஷ் ரெட்டிக்கு சொந்தமானது என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.போதைப்பொருள் விருந்தில் தண்டூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பைலட் ரோஹித் ரெட்டி, புட்டா மகேஷ் குமார் யாதவ் ஏலூரு தொகுதி எம்.பி., நமித் சர்மா, எம். ரமேஷ், வி. ஷ்ரவன் குமார், விஜய் கிருஷ்ணா, கௌஷிக் ரவி, ஷெரீப் ரெட்டி, அர்ஜுன் ரெட்டி, ரித்தீஷ் ரெட்டி, பிரியங்கா ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்த போதை மருந்து
சிம்லாவிலிருந்து கொண்டு வந்ததாக கௌஷிக் ரவி வரவழைத்தாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அனைவர் மீதும் பிஎன்எஸ் 109, ஆயுதச் சட்டம், என்டிபிஎஸ் (22) மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை மருந்து உட்கொண்டார்களா என்ற பரிசோதனையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டி, ரியல் எஸ்டேட் அதிபர் நமித் சர்மா, ரித்தேஷ் ரெட்டி, கௌசிக் ரவி மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகியோருக்கு போதை மருந்து பயன்படுத்தியதாக பாசிட்டிவ் வந்தது . அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மேலும் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

