தோள்பட்டையில் குத்திய கம்பி வாய் வழியாக வந்த விபரீதம்! சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த 13 வயது சிறுவனின் தோள்பட்டையில் இரும்புக் கம்பி ஒன்று குத்தி, வாய் வழியாக வெளியே வந்த கோரமான விபத்தில் நல்வாய்ப்பாக சிறுவன் உயிர் தப்பினான்.
பீகாரைச் சேர்ந்த நஜிஷ் என்ற சிறுவன் தாருல் உலூம் மெஹ்மூதியா மதரஸாவில் படித்து வருகிறான். வகுப்புகள் முடிந்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மசூதியின் மூன்றாவது மாடியில் நண்பர்களுடன் விளையாடச் சென்றிரு அவர், மசூதியின் மேல் தளத்திலிருந்து, அருகில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்திற்குக் குதிக்க முயன்றபோது, அவன் நிலை தடுமாறித் தரைத்தளத்தில் விழுந்தான். விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில், நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி அவரின் வாய் வழியே வெளியே வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு, அந்த இரும்புக் கம்பியை அங்கிருந்து வெட்டி அகற்றினர். வாயிலிருந்து அந்த உலோகத் துண்டு இன்னும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த நிலையில், அந்தச் சிறுவனை சூரத் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நல்வாய்ப்பாக சிறுவன் உயிர் பிழைத்துள்ளார். அறுவை சிகிச்சையின் மூலம் கம்பி அகற்றப்பட்டு தற்போது ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் உமிழ்நீர்ச் சுரப்பி மற்றும் அதைச் சுற்றியுள்ள கழுத்துத் தசைகளில் ஏற்பட்ட சிறு காயங்களை சரிசெய்தனர். சிறுவனின் உடல்நிலை முழுமையாக சீரடைந்தவுடன் பொது வார்டுக்கு மாற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

