முதலில் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ.. அதே ஊசி தான் பூஸ்டர் டோஸில் போட முடியும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்...

 
பூஸ்டர் டோஸ்

முதலில் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த ஊசிதான் பூஸ்டர் டோஸாக செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கையில் எடுத்திருந்த அஸ்திரம் தடுப்பூசி..
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் பாதிப்பின் தாக்கம் அதாவது , உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2  தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தன.

கொரோனா தடுப்பூசி

இதனையடுத்து நாடு முழுவதும்  ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால்  சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவும், 15 - 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.  அதன்படி இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும்,  ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 Dr VK Paul

இருப்பினும் பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், முன்பு எந்த தடுப்பூசி போடப்பட்டதோ, அந்த ஊசி தான் பூஸ்டர் டோசில் போட முடியும் என்று தெரிவித்தார். முதலில் கோவாக்சின் போட்டு கொண்டவர்களுக்கு , கோவாக்சினும், கோவிஷீல்டு போட்டு கொண்டவர்களுக்கு  கோவிஷீல்டும் தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக  போடப்படும் என்று தெரிவித்தார்.