திருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்ததால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பதி போலீசார், தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர டிஜிபிக்கு இரண்டு சந்தேகத்திற்கிடமான இமெயில் வந்தது. இதில் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஐ.எஸ்.ஐ. மற்றும் முன்னாள் எல்.டி.டி.இ. போராளிகளுடன் சேர்ந்து திருப்பதியில் நான்கு பகுதிகளில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் வெடிக்கப்பட உள்ளதாக மிரட்டல் வந்தது .

இதனையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான திருப்பதி அடுத்த நாராவாரிப்பள்ளியில் உள்ள முதல்வர் வீடு, திருப்பதியில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கபில தீர்த்தம் கோயில் மற்றும் கோவிந்தராஜா சுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷ்னில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டர். அத்துடன் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டன. இந்த மாதம் 6 ஆம் தேதி முதல்வர் சந்திரபாபு திருப்பதி வருகையை அடுத்து வேளாண் கல்லூரி ஹெலிபேடில் சோதனைகள் நடத்தப்பட்டன. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களிலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை இருப்பினும் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.


