பீகாரில் பள்ளி மாணவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் மாயம்

 
bihar

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற படகு பாக்மதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 20 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை காணவில்லை. அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசியுள்ள முதலமைச்சர் நிதிஷ் குமார் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.