"நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்" - விவசாய சங்க தலைவர் அதிரடி!!

 
ttn

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வந்தனர்.  அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ,அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில்  போராடி வந்தனர். 

modi

இந்த போராட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓராண்டை அடைய இருந்த நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில், " நான் எதை செய்தாலும் தேசியத்தின் நலனுக்காகவே செய்வேன். புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்காக தான் கொண்டுவரப்பட்டது.  ஆனால் அதுகுறித்து புரிய வைக்க எங்களால் முடியவில்லை.  அதனால்   விவசாயிகளிடம் மன்னிப்பு கோருகிறேன்.  இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம்.   விவசாயிகளும்,  விவசாய மேம்பாடு தான் எங்களின் பிரதான பணி . போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் எல்லோரும் தங்கள் போராட்டங்களை கைவிட்டு அவரவர் பணிக்கு செல்ல வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் வழங்கி கொண்டாடித் தீர்த்தனர்.



இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பபெறப்படாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் இந்த கூட்டத் தொடரில் மூன்று விவசாய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான அரசியல் சாசன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மோடி தெரிவித்திருந்தார். இந்த சூழலில் விவசாய சங்க தலைவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.