மேற்கு வங்க பெண்களுக்காக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு முடிவு

 
தி கேரளா ஸ்டோரி

மேற்கு வங்கத்தில் அம்மாநில பெண்களுக்காக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட அம்மாநில பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு முடிவு செய்துள்ளது.

பெரும் போராட்டம் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5ம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. சிலர் இந்த திரைப்படைத்தை பிரச்சார படம் என்று முத்திரை குத்தினாலும், மற்றொரு பகுதியினர் அற்புதம் என்று தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.  மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. அதேசமயம், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதித்தது. 

பால்குனி பத்ரா

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முன்னணி எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு, அம்மாநில பெண்களுக்காக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு தலைவர் பால்குனி பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:  படத்தில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை, ஆனால் மம்தா பானர்ஜி உண்மையை வெளியே வருவதை விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால் தடை செய்யப்பட்டதையடுத்து, அந்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படம் சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

ஏற்கனவே பா.ஜ.க. கடந்த 10ம் தேதியன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட்டது குறிப்பிடத்கக்கது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணைஅமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,  நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை இன்றைய தலைமுறையினருக்கு காட்டாவிட்டால், அவர்கள் எப்படி விழிப்படைவார்கள் என்பதை மம்தா பானர்ஜிக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்?. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். மம்தா பானர்ஜி தனது கண்களை திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.