பேரழிவுக்கான உங்கள் டிக்கெட்.. காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை கேலி செய்த பா.ஜ.க.

 
பா.ஜ.க. வெளியிட்ட கார்ட்டூன்

காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை, பேரழிவுக்கான உங்கள் டிக்கெட் என்று எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A.கூட்டணியை பா.ஜ.க. கேலி செய்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A.என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தங்களது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று தெரிவித்தது. 

காங்கிரஸ்

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் திட்டமிட்டு முடிவு எடுக்கப்படும். காங்கிரஸின் முகம் ராகுல் காந்தி. காங்கிரஸின் பிரதமர் முகம் ராகுல் காந்தி. அவர் தான் எங்களது பிரதமர் வேட்பாளராக இருந்தார் மற்றும் இருப்பார் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும், இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு

இது தொடர்பாக I.N.D.I.A. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தங்களது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து இருப்பதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியை  பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க. எக்ஸில், புதிய (பழைய) பிராண்ட். ஹார் ஏர் INDIA-பேரழிவுக்கான உங்கள் டிக்கெட் என்ற தலைப்பில்  ராகுல் காந்தி விமானத்தில் பறப்பது போன்ற கார்ட்டூனை பதிவிட்டுள்ளது.