பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவு..

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சர்கள் 8 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். அந்தவகையில் பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் மற்றும் ராஜஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோரும் தொடர்ந்து பின் தங்கியுள்ளனர்.
அதேபோல் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சோமன்னா, தான் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார். அத்துடன் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான சி.டி.ரவி சிக்கமங்களூரு தொகுதியில் பின் தங்கியிருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, சி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். இதுவரை வெளியான முடிவுகளின் படி 117 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியான பாஜக 84 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.