கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? - குமாரசாமியின் ஆதரவை பெற பாஜக, காங்கிரஸ் தீவிரம்

 
Karnataka Elections 2023

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவை பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மாலை 6 மணிநிலவரப்படி, கர்நாடகாவில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்புகளில் கூறும் நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவை பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்காக அவர்கள் பேரம் பேசுவதிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்துள்ள நிலையில், அதுபோல பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தேவேகவுடாவிடம் பேசியதாக தெரிய வந்துள்ளது.