ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திபாலி தாஸ் வெற்றி.. தொகுதியை தக்க வைத்த பிஜூ ஜனதா தளம்

 
திபாலி தாஸ்

ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பிஜூ ஜனதா தள வேட்பாளர் திபாலி தாஸ் சுமார் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்தார். இதன் மூலம் அந்த தொகுதியை பிஜூ ஜனதா தளம் தக்கவைத்து கொண்டது.

ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வும். மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நபா கிஷோர் தாஸ் கடந்த ஜனவரி 29ம் தேதியன்று முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளரால் கொல்லப்பட்டார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த அவசியம் ஏற்பட்டது. ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் சார்பில் மறைந்த நபா கிஷோர் தாஸின் மகள் திபாலி தாஸ் போட்டியிட்டார்.

நபா கிஷோர் தாஸ்

பா.ஜ.க. வேட்பாளராக தங்கதர் திரிபாதி களம் இறங்கினார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் தருண் பாண்டே உள்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் பிஜூ ஜனதா தள வேட்பாளர்  திபாலி தாஸ் தனது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க.வின் தங்கதர் திரிபாதியை 48,721 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  ஜார்சுகுடா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திபாலி தாஸ் 1,07,198 வாக்குகளும், பா.ஜ.க.வின் தங்கதர் திரிபாதி 68,477 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் தருண் பாண்டே 4,496 வாக்குகள் மட்டுமே பெற்றார்.  

வெள்ளத்தில் மூழ்கிய ஒடிஷா… நீட் தேர்வை ஒத்திவைக்க பிரதமரிடம் போனில் பேசிய நவீன் பட்நாயக்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திபாலி தாஸூக்கு பிஜூ ஜனதா தளத்தின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். இடைத்தேர்தல் வெற்றி குறித்து திபாலி தாஸ் கூறுகையில்,  என் மீது நம்பிக்கை வைத்த ஜார்சுகுடா மக்களுக்கும், எங்கள் தலைவர் நவீன் பட்நாயக்குக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு அளித்த உறுதிமொழியையும் மறைந்த எனது தந்தை நபா தாஸின் கனவுகளையும் நிறைவேற்ற நான் உறுதி பூண்டுள்ளேன். இது ஜார்சுகுடா மக்கள், என் தந்தையை நேசிப்பவர்கள், முதல்வர், மக்கள் மற்றும் பி.ஜே.டி. மற்றும் எனது தந்தையுடன் தொடர்புடைய அனைவரின் வெற்றியாகும். இது நபா தாஸின் வெற்றி என்று தெரிவித்தார்.