பிரதமர் பதவி காலியாக இல்லை - ராகுலை விமர்சித்த அமித்ஷா
சீதாதேவிக்கு பிரமாண்ட கோவில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

243 சட்டமன்ற இடங்களைக் கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதனையொட்டி, அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
பீகார் தர்பாங்காவில் நடந்த தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பீகாரில் முதலமைச்சர் பதவியும், டெல்லியில் பிரதமர் பதவியும் காலியாக இல்லை. தேஜஸ்வியை முதல்வராக்க லாலு பிரசாத்தும், ராகுலை பிரதமராக்க சோனியாவும் கனவு காண்கின்றனர். லாலு பிரசாத் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது. பாஜகவால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. எனவே பீகாரில் சீதைக்கு பிரமாண்ட கோயில் கட்டுவோம்” என்றார்.


