மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் செலுத்தாத நோயாளிகளை கட்டிப் போடும் மருத்துவமனை

 

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் செலுத்தாத நோயாளிகளை கட்டிப் போடும் மருத்துவமனை

போபால்: சிகிச்சைக் கட்டணம் செலுத்தாத நோயாளிகளை கட்டிப் போடும் வழக்கத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸின் நெருக்கடியின் போது நாடு முழுக்க ​​மருத்துவ ஊழியர்களும், மருத்துவர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரவும், பகலும் சிகிச்சையளிப்பதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனை நிர்வாகம் முகம் சுளிக்கக் கூடிய காரியங்களை மேற்கொண்டு வருகிறது.

ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு வயதான நோயாளி ரூ.11 ஆயிரம் சிகிச்சை கட்டணத்தை செலுத்தாததால் மருத்துவமனை நிர்வாகம் அவரை படுக்கையில் கட்டிப் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நோயாளிக்கு தசைப்பிடிப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் தன்னை தானே காயப்படுத்த முடியாதபடி அவரது கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டன என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிந்து ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் யார் தரப்பு குற்றவாளி என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.