செருப்புக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பொறியாளர் உயிரிழப்பு
பெங்களூருவில் செருப்புக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து பொறியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசிப்பவர் மஞ்சு பிரகாஷ்(41). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றிவருகிறார். இவரை செருப்புக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்தது கூட அறியாமல் செருப்போடு அரை மணி நேரம் நடந்ததால், பாம்பும் செருப்புக்குள்ளேயே உயிரிழந்தது. மஞ்சு பிரகாஷ்க்கு சில ஆண்டுகளுக்கு ஏற்பட்ட விபத்தால் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அன்றில் இருந்து காலில் உணர்வு இல்லாமல் போனதாகவும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
செருப்புக்குள் பாம்பு இருந்ததையும், கடித்ததையும் பற்றி அறியாமல், மஞ்சு வெள்ளிக்கிழமை மாலை செருப்பை அணிந்துகொண்டு வெளியே சென்றுவந்த பின்னர், வீடு திரும்பி வழக்கம் போல் தூங்கிவிட்டார். சனிக்கிழமை காலை, மஞ்சுவின் வீட்டிற்குச் சென்ற ஒரு நண்பர் ஷூவுக்குள் ஒரு இறந்த பாம்பைக் கண்டார். உடனே அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மஞ்சுவை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழவில்லை. தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

