முதல்வர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் காட்டுவது கட்சியில் உள்ள ஒற்றுமையின்மையை காட்டுகிறது.. காங்கிரஸை சாடிய பசவராஜ்

 
ராகுல் காந்தியை தனித்தனியே சந்திக்கும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்..

கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் காட்டுவது காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒற்றுமையின்மையை காட்டுகிறது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்தார்.


அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனால் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் தலைமை மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக  முதல்வர் பதவி தனக்கு தான் வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரும் உறுதியாக நிற்கின்றனர். இதனால் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

பசவராஜ் பொம்மை

இந்நிலையில், முதல்வர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் காட்டுவது கட்சியில் உள்ள ஒற்றுமையின்மையை காட்டுகிறது என்று காங்கிரஸை பசவராஜ் பொம்மை தாக்கினார். இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர், எனவே மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு வர அவர்கள் பாடுபட வேண்டும். 

காங்கிரஸ்

முழு மெஜாரிட்டி கிடைத்தும் முதல்வரை முடிவெடுப்பதில் தாமதம் காட்டுவது கட்சியில் உள்ள ஒற்றுமையின்மையை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு புதிய முதல்வரை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது (முதல்வர் தேர்வு) காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்சினை, இது பற்றி மேலும் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தை பற்றி அதிகம் பேசுகிறார்கள், எனவே அவர்கள் லிங்காயத்துகளுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் உள்பட என்ன பதவிகளை வழங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.